கீவ்:
உக்ரைன் நாடு மீது ரஷியா தொடங்கியுள்ள போர் இன்று 18-வது நாளை எட்டி உள்ளது.
அந்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷிய படை தீவிரமாக உள்ளது. இதற்காக கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் இருந்து 64 கி.மீட்டர் தூரத்துக்கு ரஷிய படை அணி வகுத்து வந்தது. மேலும் கீவ் நகருக்குள் தொடர்ந்து ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
ரஷியாவின் பெரும்படை தலைநகர் கீவ்வை நெருங்கிவிட்டது. அப்படைகள் தற்போது பிரிந்து சென்று கீவ் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டன. இதற்காக 64 கி.மீட்டர் தூரம் கொண்ட படைகள் வடக்கு, மேற்கு, வடகிழக்கு திசைகளில் பிரிந்து சென்றன.
அவைகள் கீவ்வில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவின் பெரும்படை கீவ் நகருக்குள் எந்த நேரத்திலும் நுழையலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக சண்டையிட உக்ரைன் ராணுவ வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.
மேலும் கீவ் நகர எல்லைக்குள் நுழைய முயலும் ரஷிய ராணுவ டாங்கிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால் ரஷிய டாங்கிகள் திரும்பி சென்றன. உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களை நிலைகுலைய செய்ய ரஷியா திட்டமிட்டு வருகிறது.
இதையடுத்து கீவ் புறநகர் பகுதிகளில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு வருகிறது. மேலும் கீவ் நகருக்குள்ளும் ஏவுகணை மற்றும் குண்டுகள் தொடர்ந்து வீசப்படுகிறது. இந்த தாக்குதல்கள் மூலம் உக்ரைன் ராணுவத்தின் செயல்பாட்டை தடுத்து கீவ் நகருக்குள் நுழையும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது. இதனால் கீவ் நகரில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபடியே இருக்கிறது.
இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் முன்னேறி வந்து சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் இருந்து கீவ் நகருக்குள் ரஷிய படை நுழைய தீவிரமாக உள்ளன.
அவர்களை தடுக்க உக்ரைன் ராணுவத்தினர் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கீவ் நகர எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
உக்ரைன் அதிபரின் ஆலோசகர் போடோல்யாக் கூறும்போது, ‘‘கீவ் நகர் ஏற்கனவே முற்றுகையின் கீழ் உள்ளது. ராணுவமும் தன்னார்வலர்களும் நகரத்தை பாதுகாக்க வீதி, வீதியாக தயாராகி வருகிறார்கள்’’ என்றார்.
தலைநகர் கீவ்வைத் தவிர அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள வாசில்கிவ் நகர் விமான நிலையம் ரஷியாவின் தாக்குதலில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரமான மரியுபோலில் ஏவுகணை, குண்டு வீச்சு தாக்குதல் நடந்து வருகிறது. தொடர் தாக்குதல் காரணமாக மரியுபோல் நகரம் முற்றிலும் உருகுலைந்து இருக்கிறது. அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் உணவு, தண்ணீர் இன்றி அல்லாடி வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் வான்வழி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ், கார்கிவ், லிவிவ், ஒடேசா, ஜபோரிஜியா, செர்னோபில், டினிப்ரோ, சுமி, போல்டாவா உள்ளிட்ட நகரங்களில் அபாய ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே போரில் ரஷியா பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளதால் தொடர்ந்து புதிய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்… இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – சுகாதாரத்துறை அமைச்சகம்