துப்பாக்கி முனையில் ரூ.1.1 கோடி கொள்ளையடித்த ஐந்து திருடர்கள், கோயிலில் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
வடக்கு டெல்லியில் கடந்த மார்ச் 3ஆம் தேதி, ரோகினி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் இரண்டு ஊழியர்கள் சாந்தினி சவுக்கில் உள்ள நகைக்கடைக்காரரிடம் ரூ.1.1 கோடி வசூல் செய்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது ஒரு பைக் மோதியது. பைக்கில் இருந்தவர்கள் தங்கள் கைத்துப்பாக்கிகளை எடுத்து, ஊழியர்களை அச்சுறுத்தி, பணத்துடன் பைகளை எடுத்துச் சென்றனர்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சாந்தினி சவுக் மார்க்கெட் அருகே புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகளின் உதவியுடன் ஐவரையும் அடையாளம் கண்ட போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தொகையில் ரூ. 1 லட்சத்தை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகவும், ஆனால் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நகைக்கடையின் முன்னாள் ஊழியர் ஆவார். அவர் குற்றம்சாட்டப்பட்ட மற்றவருக்கு பணம் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவின் உத்தரவின் பேரில் சமீபத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்யத் தொடங்கினர். சாந்தினி சவுக் சந்தையில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த காட்சிகளில் அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM