ரஷ்ய துருப்புகளால் கடுமையாக சிதைக்கப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பு இரண்டு வாரங்கள் கடந்தும் நீடித்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய படைகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் சுமார் 1,500 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது தனியார் அமெரிக்க செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய படைகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு வளாகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் குண்டு வீச்சுக்கு இலக்காகியுள்ளது.
தற்போது நகரத்தில் எஞ்சியிருக்கும் அடிப்படை பொருட்கள் தொடர்பாக பொதுமக்களிடையே கொள்ளை மற்றும் வன்முறை மோதல்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மருத்துவமனைகள் முழு நேரமும் இயங்க முடியாத சூழல், உணவு மற்றும் தண்ணீர் மிக குறைந்த அளவிலேயே வினியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மரியுபோல் நகர நிர்வாகம் அளித்த தகவலில், ரஷ்ய தாக்குதலில் குறைந்தது 1,582 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரை முற்றுகையிடுவதற்கும் முந்தைய நாள் சுமார் 13,000 மக்கள் நகரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கும் முந்தைய நாள் சுமார் 25,000கும் மேற்பட்ட நகர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரை கைப்பற்றாமல் இருக்க அப்பாவி பொதுமக்களை உக்ரைன் நிர்வாகம் குறித்த நகரில் சிக்க வைத்திருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.