பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார். அத்துடன் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதேபோல் நீண்ட நேரம் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லசித் எம்புல்தெனிய 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது. எனினும் விக்கெட்டுகளை காப்பாற்ற இலங்கை அணி கடுமையாக போராடவேண்டியிருக்கும்.