2021-22 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் மீதான வட்டி 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1977-78ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டிருந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சுமார் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்தது.
இந்நிலையில், தற்போது வட்டி விகிதத்தை 8.10 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு முடிவு ஒப்புதலுக்காக நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அரசு அங்கீகரித்த பின்னரே அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிஎஃப் மீதான வட்டி விகிதம் குறைப்புக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தவறான அணுகுமுறையை கையாளுவதாக கூறும் தொழிற்சங்கத்தினர், வட்டி விகிதம் குறைப்பை உடனே கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
முன்னதாக, கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக இருந்தது. அடுத்த நிதியாண்டில் 8.5 சதவிகிதமாக குறைத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Paytm-க்கு ரிசரவ் வங்கி விதித்த தடை… எதற்கு?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM