புதுடெல்லி:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதைடுத்து தோல்வி குறித்து ஆராயவேண்டும் என தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வல் பூபேஷ் பாகல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், ராகுல் காந்திதான் பாசிச கட்சிகளையும் மோடியையும் எதிர்க்க முடியும் என்பதால், அவர்தான் கட்சியின் தலைமை பொறுப்பை விரைவில் ஏற்ககவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு உட்கட்சிக்குள் இருந்த பிரச்சனைதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலர் மறுத்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில், உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடித்து, கட்சியின் முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்… தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க.- மு.க.ஸ்டாலின் பேச்சு