கர்நாடகாவில் 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுவன் ஆதார் அட்டை மூலமாக மீட்கப்பட்டுள்ளான்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த எலஹங்காவை சேர்ந்தவர் பார்வதி. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் அங்குள்ள உழவர் சந்தையில் நாள் தோறும் காய்கறி மற்றும் கீரைகள் விற்று பிழைப்பு நடத்திவருகிறார் பார்வதி. இவரது மகன் பரத் வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி. அவரை நாள்தோறும் தன்னுடன் சந்தைக்கு அழைத்துச் செல்வது பார்வதியின் வழக்கம். கடந்த 2016ஆம் ஆண்டு 13 வயதாக இருக்கும்போது, வழக்கம்போல் தாயுடன் சந்தைக்குச் சென்ற பரத், திடீரென மாயமாகி இருக்கிறான். எங்காவது விளையாடச் சென்றிருப்பான் என்று அலட்சியமாக இருந்த பார்வதி, இருட்டிய பின்பும் பரத் வீடு திரும்பாததால், பதறிப் போய் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு பல்வேறு இடங்களில் தேடி இருக்கிறார்.
கர்நாடகா முழுவதும் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகனின் புகைப்படத்தை அனுப்பி ஆதரவற்றோர் இல்லங்கள், ஆசிரமங்கள், கோவில்கள் என தேடிப் பார்த்தும் பலனில்லாமல் பார்வதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். மற்றொரு புறம் தனது தாயைத் தேடி அலைந்த சிறுவன் பரத், வாய் பேசமுடியாததால் விவரத்தை யாரிடமும் கூறமுடியாமல் அழுதுகொண்டே பசியில் சுற்றியிருக்கிறான்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சிறுவனைப் பார்த்து பரிதாபப்பட்டு உணவு வழங்கியதோடு, அவனை போலீசில் ஒப்படைக்காமல் தங்களுடன் நாக்பூர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் பரத்தை சேர்த்து விட்டுள்ளனர்.
6 ஆண்டுகள் தாயைப் பிரிந்து ஆசிரமத்தில் வசித்து வந்த சிறுவன் பரத்தை ஒருவர் அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரத்துக்கு ஆதார் அட்டை எடுத்திருந்தால் முகவரியை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு மாநகராட்சி அலுவலகத்தில் அவனது கைரேகைப் பதிவையும் கருவிழி பதிவையும் கொடுத்து பரிசோதித்துள்ளார். அதில் அவர் எதிர்பார்த்தது போலவே, சிறுவன் பரத்தின் கர்நாடக முகவரி கிடைத்துள்ளது.
உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு பரத்தை அழைத்து சென்ற அந்த நபர் எலஹங்கா காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். பரத்தின் தாய் பார்வதி கொடுத்த புகார் அங்கு ஏற்கனவே பதிவாகி இருந்ததால், மகன் கிடைத்துவிட்ட விவரத்தை அவருக்குத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நாக்பூர் சென்ற பார்வதியிடம் அம்மாநில குழந்தைகள் நல அமைப்பு பரத்தை ஒப்படைத்தது. கண்ணீர் மல்க மகனை முத்தமிட்டு ஆரத் தழுவிக் கொண்ட பார்வதி, இரு மாநில போலீசாருக்கும் குழந்தைகள் நல அமைப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.