நாமக்கலில் 9ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, இரண்டாவது தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கீழே மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் கைப்பிடி கம்பியில் விழுந்த மாணவி, பலத்த காயமடைந்தார்.
ஆசிரியர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளை இழந்த துயரம் தாங்காமல் அவரது தாய் கதறி துடித்த காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.
பள்ளியில் ஆசிரியர்கள் யாரேனும் திட்டினார்களா?, குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா என மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தற்கொலை எதற்கும் தீர்வாகாது என தெரிவித்துள்ளனர்.