எனக்கு கால் ஆணி பிரச்னை உள்ளது. ஆபரேஷன் செய்த பிறகும் திரும்ப வந்துவிட்டது. இதற்குத் தீர்வு என்ன?
– ராணி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்.
“கால்களில் அழுத்தம் அதிகமிருக்கும் பகுதியில், சருமத்தின் உராய்வும் அழுத்தமும் அதிகமாகி வளரக்கூடிய இறந்த செல்களின் தொகுப்புதான் கால் ஆணி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை `காலஸ்’ (callus) என்று சொல்வார்கள். மிக இறுக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது போன்ற விஷயங்களால் கால் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கிறது.
கால் ஆணிக்கு அறுவைசிகிச்சை செய்கிறார்கள். அது மீண்டும் திரும்புமா என்றால் 50 சதவிகித மக்களுக்கு அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்த பிறகும் அவர்கள், இறுக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது என அதே தவறுகளை மீண்டும் செய்வார்கள். அப்படிச் செய்தால் அடிக்கடி இந்த பாதிப்பு தொடரும்.
இந்தப் பிரச்னை உள்ளவர்கள் `போடியாட்ரிஸ்ட்’ (Podiatrist) எனப்படும் கால்களுக்கான சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் பரிந்துரையின் பேரில் பாதங்களில் எங்கெல்லாம் அழுத்தம் அதிகமிருக்கிறது என்பதைக் கண்டறிய `போடியா ஸ்கேன்’ என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
குதிகால் பகுதியும் சோதிக்கப்படும். அது தெரிந்ததும் காலணிகள் வாங்கும்போது பிரஷர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் `ஆஃப் லோடிங்’ என்ற முறையில் காலணியின் திக்னெஸ்ஸை குறைத்தோ, லேயர்களை குறைத்தோ பிரத்யேகமாகத் தயாரித்துக் கொடுப்பார்கள். அதை போடியாட்ரிஸ்ட்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
கால் ஆணியைக் குணப்படுத்துகிறேன் என்று நீங்களாகவே வீட்டிலேயே சுய மருத்துவ சிகிச்சைகளை முயல வேண்டாம். அந்தப் பகுதியைக் கீறி ஆணியை எடுக்க முயல்வது கால்களில் இன்ஃபெக்ஷன் ஆகி, பாதிப்பைத் தீவிரப்படுத்தும். மீண்டும் மீண்டும் அந்த பாதிப்பு தொடரவும் காரணமாகிவிடும். எனவே, முறையான மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?