டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஆல்-அவுட், அடுத்த களமிறங்கிய இலங்கை பேட்டர்களில் பாதி பேர் பெவிலியனில். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவிலேயே மூன்றாவது நாள் போல மாறியிருக்கிறது.
முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை அகர்வாலுக்கு ஃபுல்லராக அவுட்சைட் ஆஃபில் வீசினார் லக்மல். பந்து பிட்சான இடத்தில் புழுதி நன்றாக எழும்பியது. அந்த ஒற்றை பந்தே ஆட்டத்தின் மொத்த போக்கையும் தெளிவாகக் கூறிவிட்டது.
சென்ற ஆண்டு பிப்ரவரில் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியை இரண்டே நாள்களில் வென்றது இந்திய அணி. அதற்கு சிறிதும் வித்தியாசம் இல்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது இப்போட்டி. ஏன், அதைவிட சற்று வேகமாகவே செல்கிறது என்று கூட சொல்லலாம்.
ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு மேலும் கடினமாகும் என்பதால் டாஸை வென்றது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், பிட்சினால் உண்டான சீரற்ற பவுன்ஸ் மற்றும் டர்ன் ஆகியவற்றால் இந்திய அணி தன் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் 148/6 என்றிருந்த இந்தியா 200-ஐ எட்டுவதே சந்தேகம் என்றிருந்தது.
இக்கடினமான சூழலில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி இந்திய அணியின் ஸ்கோரை 252 ரன்களுக்கு உயர்த்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். டிப்பென்ஸ் என்பதை சிறிதும் யோசிக்காமல் ஸ்பின்னர்களை அவர் கவுன்ட்டர் அட்டாக் செய்த விதம் அத்தனை நேர்த்தியாக இருந்தது. அவருக்கு முன்பாகத்தான் ரிஷப் பண்ட்டும் லிமிடெட் ஓவர் இன்னிங்ஸ் ஒன்றை ஆடிவிட்டு சென்றிருந்தார்.
ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ள நல்ல வாய்ப்பிருந்தும் அதை இலங்கை பௌலர்கள் முழுவதுமாக வீணடித்தனர். கூடுதல் ஃபுல்லர் அல்லது கூடுதல் ஷார்ட் இதை மட்டுமே அந்த அணியின் ஸ்பின்னர்கள் ஷ்ரேயாஸுக்கு தொடர்ந்து வீசியதே அதற்கு காரணம். அவை அனைத்தையும் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டிருந்தார் அவர். 98 பந்துகளைச் சந்தித்த ஷ்ரேயாஸ் 92 ரன்களுக்கு ஸ்டம்பிங் ஆக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
உச்ச ஃபார்மில் இருக்கும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் கூடுதலாக ஜெயந்த் யாதவிற்கு பதிலாக அக்சர் படேலும் அணிக்குள் வர, இலங்கை அணி இன்றைக்கே ஆல்-அவுட்டானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது போலதான் இருந்தது இந்திய ரசிகர்களின் மனநிலை. ஆனால் நடந்ததோ வேறு. இயற்கை வெளிச்சத்தில் இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் செய்ததை செயற்கை வெளிச்சத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகழ்த்தினர்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் குசல் மெண்டிசையும் நான்காவது ஓவரின் முதல் பந்தில் திரிமனேவையும் அடுத்தடுத்து வெளியே அனுப்பினார் பும்ரா. ஷமியும் தான் வீசிய பந்திலேயே கருணாரத்னேவின் ஸ்டெம்புகளைத் தகர்க்க ஆறு ஓவர் முடிவில் 14/3 என்றானது இலங்கை அணியின் ஸ்கோர். அதன் பிறகும் விக்கெட் வீழ்ச்சி நின்றபாடில்லை. மேத்யூஸ் மட்டும் 43 ரன்கள் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருக்கிறது இலங்கை.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை அணிக்கு இன்னும் 166 ரன்கள் தேவை. என்ன செய்ய போகிறது இலங்கை?