கொல்கத்தா:
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அடுத்து மேற்கு வங்காளத்தை குறிவைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செயதுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு வங்காள பொறுப்பாளர் சஞ்சய் பாசு கூறும்போது, “2023-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஏற்கனவே எங்கள் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். மார்ச் 13 அன்று கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.
தற்போது மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்காள பஞ்சாயத்துத் தேர்தலை குறிவைத்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற இமாலய வெற்றியைத் தொடர்ந்து குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செயதுள்ளது.