லக்னோ: சமீபத்தில் முடிந்த உபி சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒரு சில கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், பாஜ 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகவே சமாஜ்வாடி செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்த அகிலேஷ் முடிவு செய்துள்ளார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் இவர் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே நேரம், அசாம்கார் தொகுதி எம்பி.யாகவும் இருக்கிறார். தற்போது, இந்த 2 பதவிகளில் ஒரு பதவியை மட்டுமே அவர் தக்கவைத்து கொள்ள முடியும். எனவே, எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல், இக்கட்சியை சேர்ந்த பலம் வாய்ந்த முஸ்லிம் தலைவரான அசம்கானும் ராம்பூர் எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, தான் ஏற்கனவே வகித்து வரும் ராம்பூர் எம்பி பதவியை தக்கவைத்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.