சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
2 ஆண்டு நடக்கவில்லை
கடைசியாக 2019-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகளும் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும்கூட அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2022-ம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7-ம் தேதி வெளியிட்டது. மேலும், இந்தத் தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி, டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (14-ம்தேதி) தொடங்குகிறது. தாள்-1 தேர்வைஇடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், தாள்-2 தேர்வைபிஎட் முடித்த பட்டதாரிகளும் எழுத வேண்டும்.
உரிய கல்வித்தகுதி உடையவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.trb.tn.nic.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட்இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13-ம் தேதி ஆகும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வு நேரடி தேர்வாக (ஆப்லைன் தேர்வு) இருக்குமா அல்லது கணினிவழி (ஆன்லைன் தேர்வு) இருக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
150 மதிப்பெண்
டெட் தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. இதில் பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), இடஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 82) பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். டெட் தேர்வு தேர்ச்சி ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது ஆகும்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும். தற்போது நடத்தப்படும் டெட் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டவுடன் உடனடியாக இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் வாரியம் வெளியிட இருக்கிறது.
இந்த போட்டித் தேர்வை டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் (முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உள்பட) எழுதலாம்.
காலிப் பணியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. புதிய காலியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இதனிடையே, ஏற்கெனவே டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பணி நியமனத்துக்கு இன்னொரு தேர்வு நடத்தக் கூடாது என்றும் குறைந்தபட்சம் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அண்மையில் டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 ஆண்டுகளுக்குப் பிறகுதற்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார்7 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.