சென்னை ஆவடி அருகே ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்யச் சென்ற கூலிப்படையினர் ஒரே நேரத்தில் இருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் இருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தனர்.
இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த போலீசார் , அவர்கள் இருவரும் ஆவடி வசந்தம் நகரை சேர்ந்த சுந்தர், கவுரிபேட்டையை சேர்ந்த அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்கு பின்னணியில் பிளாக்மெயில் பஞ்சாயத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
ஆவடி, கொள்ளுமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் இவரது மனைவி பிரசில்லா. 2018ம் ஆண்டு மணிகண்டன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது வேப்பம்பட்டை சார்ந்த ஜெகன் என்ற ஆட்டோ ஓட்டுனர், மணிகண்டனை ஜாமீனில் எடுக்க உதவி செய்துள்ளார்.
இதன் பிறகு, மணிகண்டனின் மனைவி பிரிசில்லாவுடன் ஜெகனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு ஜெகன், பிரிசில்லாவை அழைத்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்த சென்று விட்டார். மணிகண்டன் பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும் வர மறுத்த பிரசில்லா ஜெகனுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
இதன்பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் அவரது முதல் மனைவியை மீண்டும் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெகன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க 1லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் மணிகண்டனிடம் பிளாக்மெயில் செய்துள்ளார். அப்போது 10நாளில் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறி அங்கிருந்து தப்பி உள்ளார்.
தனது மனைவியை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக, கூலிப்படையை ஏற்பாடு செய்த அவர், சனிக்கிழமை பணம் ஏற்பாடு செய்து விட்டதாக கூறி ஜெகனை அழைத்துள்ளார்.
இதனை நம்பிய ஜெகனும் ஆவடி, ஓ.சி.எப் மைதானத்திற்கு பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து சனிக்கிழமை இரவு மணிகண்டன் அங்கு வந்துள்ளார். ஜெகனுடன் அவரது கூட்டாளிகளான சுந்தர், அசாருதீன், யாசின் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
பணம் கிடைக்க போகின்ற மகிழ்ச்சியில் ஜெகன் தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியுள்ளான். அப்போது, மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படையை சேர்ந்த 4பேர்கள் திடீரென்று அங்கு வந்து ஜெகனை வெட்டிக் கொல்ல முயன்றனர். அங்கிருந்த கூட்டாளிகளான சுந்தர், அசாருதீன் ஆகியோர் கூலிபடையினரை தடுத்து உள்ளனர்.
இதனை அடுத்து, ஆத்திரம் அடைந்த சுந்தர், அசாருதீன் ஆகிய இருவரையும் கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, ஜெகனை வெட்ட விரட்டி உள்ளனர். ஜெகன் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், ஜெகன், யாசின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அங்கிருந்து மணிகண்டன் தலைமையில் கூலிப்படையினர் தப்பி சென்றனர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, 4 தனிப்படைகள் அமைத்த போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட கூலிப்படையினரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆவடி அடுத்த வெள்ளானூர், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை போலீசார் பிடிக்க சென்றபோது மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். கூட்டாளிகளான 4பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்த போலீசார் அவர்களுக்கு இந்த இரட்டை கொலையில் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் கூலிப்படையினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.