இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவியதிலிருந்து, கடந்த மே 2020க்குப் பின்னர் முதன்முறையாக அன்றாட பாதிப்பு மிகவும் குறைந்தளவில் பதிவாகியுள்ளது.
கடந்த மே 2020க்குப் பின்னர் இவ்வளவு குறைவான அளவில் அன்றாட பாதிப்பு பதிவாகியுள்ளது ஆறுதளிப்பதாக அமைந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,503 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,29,93,494 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று (மார்ச் 13) 95 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியானது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கரோனா உயிரிழப்பு 5,15,877 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.72% ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,41,449 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்றுள்ளது) 0.47% ஆக உள்ளது. வாராந்திர கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 0.47 என்ற சதவீதத்திலேயே உள்ளது.
180 கோடி டோஸ் தடுப்பூசி: இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த 2021 ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தப்பட்டது. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது. எனவே அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்த முடிவு செய்யப்பட்டு தடுப்பூசிக் கொள்கையில் கடந்த ஜூன் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் 180.19 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.