ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்தது குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது. அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பராமரிப்பு நடைமுறைகளின் போது தவறாக ஏவுகணை விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லையில் விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் ஏவுகணை பாய்ந்தது வருத்தத்துக்கு உரியது. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் ஹஃபீஸாபாத் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் பேசினார். அப்போது அவர், ”இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் தான் வேண்டாம் என்று விட்டுவிட்டோம். நமது ராணுவத்தையும் நாட்டையும் மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.