இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடர்ச்சியாக கிடைக்கும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற கடற்றொழிலாளர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான முதலாவது கட்ட உதவிகளை வழங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும், இலங்கை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
இலங்கை மக்களின் தேவையறிந்து காலத்துக்கு காலம் தேவையான உதவிகளை வழங்கி வருகின்ற இந்தியா, இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் என்பது, இந்தியக் கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினரால் இலங்கை கடல் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற வளங்களை அழிக்கின்ற தடை செய்யப்பட்ட தொழில் முறைக்கு எதிரான விடயமே தவிர, இந்தியாவிற்கு எதிரான விவகாரம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் கச்சதீவில் இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பு, இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்கள் மத்தியிலும் அண்மைக் காலமாக இருந்து வந்த இறுக்கமான சூழலை தளர்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.