இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு அந்நாட்டுக்குச் செல்லும் தங்கள் பயணிகளுக்கு கனடாவும் பிரித்தானியாவும் சில பயண ஆலோசனைகளை தெரிவித்துள்ளன.
தனது குடிமக்கள் போதுமான உணவுப்பொருட்கள், தண்ணீர் மற்றும் எரிபொருளைக் கைவசம் இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு கனடா இலங்கையிலிருக்கும் தனது குடிமக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
அத்துடன், இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், போதுமான மருந்துப்பொருட்களைக் கைவசம் வைத்திருக்குமாறும், நிலவரங்களை அறிந்துகொள்ள உள்ளூர் ஊடகங்களை கவனித்துக்கொள்ளுமாறும் கனடா தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல, பிரித்தானியாவும், மளிகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் முதலான இடங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ளவேண்டிவரலாம் என்று தனது குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள் பிரித்தானியர்கள்தான்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கை அரசு, பால் பொருட்கள், பழங்கள் மற்றும் மீன் முதலான 367 பொருட்களை அத்தியாவசியமற்ற பொருட்களாக கருதி, அவற்றின் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.