உக்ரேனிய அகதிகளுக்கு ஆட்கடத்தல் ஆபத்து குறித்து ஜேர்மனியின் பெர்லின் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, நகரின் பிரதான ரயில் நிலையத்தில் பணம் அல்லது தங்குமிட சலுகைகளை ஏற்க வேண்டாம் என உக்ரைன் அகதிகளை பெர்லின் அரசு எச்சரித்துள்ளது.
இதுபோன்ற சலுகைகள் அளிப்பவர்களின் மூலம் உக்ரைன் அகதிகள், கட்டாய விபச்சாரம் அல்லது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் சிக்கலாம் என்ற கவலையின் காரணமாக அரசாங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அகதிகளின் சூழ்நிலையில் ஆதாயம் தேட விரும்பும் குற்றவாளிகள், பெர்லின் மத்திய நிலையத்தில் நடமாடக்கூடும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும் என பெர்லின் அரசாங்கம் உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான உதவிகளை ஏற்க வேண்டாம் என்று தனியாக பயணம் செய்யும் பெண்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கும் விதத்தில் ஜேர்மன், உக்ரேனிய மற்றும் ரஷ்ய மொழிகளில் பொலிஸ் அறிவிப்பு பலகைகள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அகதிகள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தங்க வைக்கப்பட்டிருப்பதாகவோ இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.