லீவ்,-உக்ரைன் – போலந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் ராணுவ தளம் மீது, ரஷ்ய படையினர் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், 35 பேர் உயிரிழந்தனர்; 134 பேர் காயமடைந்தனர்.’நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் எல்லைப் பகுதியில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தியது.ஆக்கிரமிக்கும் முயற்சிகடந்த 24ம் தேதி முதல், உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் பிரதான நகரங்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்கள் மீதும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.ரஷ்ய படைகளின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஏராளமான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியே வருகின்றனர். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. இதைத்தவிர, ஏராளமானோர் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.இதற்கிடையே உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.மேலும், உக்ரைனுக்கு உதவும் வகையில், ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வழங்கி வருகின்றன.
இந்த உதவிகள போலந்து வழியாக, உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.இந்நிலையில், உக்ரைன் – போலந்து எல்லைப் பகுதியில் லீவ் ஆப்லாஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தினர்.இந்த கொடூரமான தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 134 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாகாண கவர்னர் மேக்சிம் கோஜிட்ஸ்கி தெரிவித்துஉள்ளார்.ஏவுகணை தாக்குதல்இந்த ராணுவ தளத்தில் நேட்டோ நாடுகளின் ராணுவத்தினர் கடந்த காலங்களில் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் கீவ் மீது ஏவுகணைகளை வீசி, தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கீவ் நகரை மிகவும் நெருங்கி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்து உள்ளது. இதையடுத்து தலைநகரை ரஷ்ய படையினர் கைப்பற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, உக்ரைன் ராணுவத்தினர் எடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, டோனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதி மற்றும் மடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 32 பேர் காயமடைந்துள்ளனர்
.இதேபோல் இர்பின் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார்.குண்டுவீச்சு: 7 பேர் பலிஉக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பெரேமோஹா என்ற கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று, அவர்கள் சென்ற வாகனங்கள் மீது ரஷ்ய ராணுவத்தினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். அதிபர் குற்றச்சாட்டுஉக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியதாவது:உக்ரைனை பிளவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், எங்கள் நாட்டு மக்களை, கிளர்ச்சியாளர்களாக மாற்ற, ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கனவே நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களை விட்டு வன்முறைகளை கட்டவிழ்த்த ரஷ்யா, தற்போது மேலும் பலரை சொந்த நாட்டிற்கு எதிராகவே களம் காண வைக்க முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தாய் – மகளுக்கு நேர்ந்த கதிஉக்ரைனின் கீவில், நேற்று, உடல்நலன் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு மருந்து வாங்குவதற்காக, வலேரியா மக்சேட்ஸ்கா என்ற பெண், தாய் ஐரினா, கார் டிரைவர் யாரோஸ்லாவ் ஆகியோருடன் சேர்ந்து, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.காரில் சென்றபோது, தொலைவில் இருந்து அதை கவனித்த ரஷ்ய படையினர், கார் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.