கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம் போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேட்டோவில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவ, மாணவியரை மீட்கும் சவாலான பணியை திறம்பட மேற்கொண்டது. தூதரகத்தின் நடவடிக்கைகளால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் தலைநகர் கீவைகைப்பற்ற ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கீவ் நகரைச் சுற்றி வளைத்துள்ள ரஷ்ய பீரங்கி படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. வான்வழி தாக்குதலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம் அண்டை நாடான போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்பு நிலைமை மேம்பட்ட பிறகு தூதரகத்தை கீவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.