கொல்கத்தா: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வந்த இந்திய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இதைத் தொடர்ந்து அவர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவிகள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானத்தை இயக்கி 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானி மகாஸ்வேதா சக்கரவர்த்தி மீட்டு வந்துள்ளார். போலந்து, ஹங்கேரியிலிருந்து டெல்லிக்கும், உ.பி.யிலுள்ள ஹிண்டன் விமான தளத்துக்கும் அவர் விமானத்தில் பறந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மகாஸ்வேதா சக்கரவர்த்தி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். மேலும் மேற்கு வங்க மாநில பாஜக மகளிரணி தலைவர் தனுஜா சக்கரவர்த்தியின் மகளுமாவார்.
24 வயதான மகாஸ்வேதா, விமானத்தில் பல முறை பறந்து ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்பியுள்ளார். இந்தத் தகவல்களை தேசிய பாஜக மகளிரணி தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளது. மேலும் மகாஸ்வேதா விமானத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களையும் பாஜக மகளிரணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியர்களை மீட்டு வர விமானத்தை இயக்கிய மகாஸ்வேதாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.