உக்ரைன் போரில் சீனா உதவியை ரஷ்யா நாடியதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ராணுவ உபகரணங்கள் தந்து உதவுமாறு சீனாவை நாடியதாக பல அமெரிக்க பத்திரிக்கைகள் பெயர் குறிப்பிடாமல் சில அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டன.
இதையடுத்து, ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், உக்ரைனில் ராணுவ உதவிகளை வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக நம்புவது ‘தவறான தகவல்’ என தெளிவுப்படுத்தினார்.
மேலும், போரில் சீனாவின் பங்கு பற்றி அமெரிக்கா பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
சீனா அமைதியை வலியுறுத்துவதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதிலும் ஆக்கபூர்வமான பங்கைக் கொண்டுள்ளது என்று செய்தித்தொடர்பாளர் வலியுறுத்தினார்.