கீவ்:
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.இதுவரை உக்ரைன் – ரஷியா உயர் மட்ட தூதுக்குழுக்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய, ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புதின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன்-ரஷியா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை 10.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை காணாலி மூலம் நடைபெறும் என தலைநகர் கீவ்-லிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதை ஜெலன்ஸ்கியின் ஆலோசகரும் உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்தவருமான மைக்கைலோ பொடோலியாக் உறுதிபடுத்தி உள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக, புதின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்