நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை மணந்த இவர், சில வாரங்களுக்கு முன்பு அவரைப் பிரிவதாக அறிவித்தார். இருவரும் மனப்பூர்வமாகப் பிரிவதாக தங்களின் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். முக்கியமாக, ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய டைரக்ஷன் வேலைகளில் தன்னை பிஸியாக ஈடுபடுத்தி கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ‘மூணு’ படத்தை தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் வைத்து இயக்கியிருந்தார். இந்தப் படம் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். பின்னர், ‘சினிமா வீரன்’ என சினிமா ஸ்டன்ட் நடிகர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் இயக்கினார் ஐஸ்வர்யா.
தற்போது ‘முசாபிர்’ எனும் மியூசிக் ஆல்பத்தை இவர் இயக்கி வருகிறார். இதன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்த ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் தங்கி சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது, இந்த ஆல்பத்தின் பணிகள் விரைவில் முடிவுறும் நிலையில், ட்விட்டரில் இயக்குநரும் நடிகருமான லாரன்ஸ் உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘work mode on’ எனப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து லாரன்ஸ்யிடம் பேசினோம்.
“என் தங்கச்சியை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமாக சீக்கிரமே அறிவிப்பாங்க. அதுவரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது. அவங்ககூட வொர்க் பண்ண போறோம்ங்குறதுல ரொம்ப சந்தோஷம். அதுவும், இந்த நேரத்துல. அவங்க வாழ்க்கையில நடக்குற பற்றி பேச எனக்கு உரிமை இல்ல. ஆனா, என் தங்கச்சி எப்போவும் சந்தோஷமா இருக்கணும். நல்லா வரணும். எனக்கு லைப் கொடுத்தவர் தலைவர். அவரோட வீட்டு பொண்ணுங்க எப்போவும் நல்லா இருக்கணும்.
என்னை சினிமாவுக்குக் கூப்பிட்டு வந்தது தலைவர்தான். தலைவர் ரசிகரா ஆனதில இருந்து, ரஜினி சாரோட படத்துக்கு டான்ஸ் கொரியோகிராப் பண்ணுன காலத்துல இருந்து தங்கச்சிக ரெண்டு பேரையும் நல்லா தெரியும். தலைவர் வீட்டுக்குப் போயிட்டு வரும் போதெல்லாம் ரெண்டு தங்கச்சிகளும் பாசமா பேசுவாங்க. ரஜினி சார்க்கு டான்ஸ் ஷூட்டிங் போது இவங்க ரெண்டு பேரும் ஸ்பாட்டுக்கு வருவாங்க. அப்போ நிறைய நேரம் பேசுவாங்க. ஷங்கர் படத்துல வொர்க் பண்றப்போ அண்ணன்ங்குற உரிமையோட நல்லா பேசுவாங்க. ரொம்ப மரியாதையான பொண்ணு ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்கையில எப்பவும் இருப்பேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.