மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாந்தாராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாளில் இருந்து அவரின் மனைவி சில நாள்கள் மாதவிடாய் என்று கூறி தாம்பத்ய வாழ்க்கைக்கு சம்மதிக்கவில்லை. அதன் பிறகு தன் தந்தை ஊருக்குச் சென்றுவிட்டார். ஆறு நாள்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்குத் திரும்பினார்.
பிறகு சாந்தாராம் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட, தன் மனைவியின் பால் உறுப்பில் ஆண் தன்மை இருப்பது தெரியவந்தது. குழந்தைகளின் ஆண் உறுப்பு போன்ற தோற்றம் இருந்ததாக, சாந்தாரம் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தார்.
பரிசோதனையில், அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதனை சரி செய்ய மருத்துவமனையில் அவர் ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டதும் தெரிய வந்தது. மருத்துவர் கூற்றுப்படி, அவருக்கு பெண் பாலின உறுப்பு இருந்தாலும், தாம்பத்ய வாழ்க்கையோ, குழந்தை பிறப்போ சாத்தியமில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து சாந்தாராம் தன் மனைவியை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சாந்தாராமிற்கு எதிராக, அவர் மனைவி போலீஸில் புகார் செய்தார். சாந்தாராமும், தன்னைப் பெண் வீட்டார் ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அப்பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவில்லை. மாறாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெண் உறுப்புகள் சரியாக இருப்பதாகவும், இதனை மோசடி என்று கூற முடியாது என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து சாந்தாராம் சுப்ரீம் கோர்ட்டில், தன் மனைவியிடமிருந்து விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில், `அவள் ஓர் ஆண், என்னை ஏமாற்றிவிட்டாள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்க மறுத்தனர். இதையடுத்து டாக்டர்களின் அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை பரிசீலித்த நீதிபதிகள் அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.