தனது மனைவி பெண் அல்ல என கணவன் தொடர்ந்த விநோதமான விவாகரத்து மனுவிற்கு பதிலளிக்குமாறு மனைவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆனபின் மாதவிடாய் இருப்பதாகக் கூறி சில நாட்கள் மனைவி பிறந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் கணவன் மனைவியாக வாழத் துவங்கியுள்ளனர். அப்போதுதான் கணவருக்கு தனது மனைவி உண்மையில் ஒரு பெண்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிறகு, கணவர் தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவருக்கு ‘இம்பர்ஃபோரேட் ஹைமென்’ எனப்படும் மருத்துவப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, கணவர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, மனைவியை அவரது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டார். தன்னை தந்தையும் மகளும் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420இன் கீழ் வழக்கு தொடர்ந்தார் அவர். ஆனால் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் கணவர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவிற்கு பதிலளிக்குமாறு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM