ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.25 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே திருடர்கள் அலேக்காக தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான ஏடிஎம்மில் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் புகுந்துள்ளனர். அங்குள்ள ஏடிஎம்மை உடைத்து அதிலிருந்து பணத்தைத் திருட முயற்சித்துள்ளனர். அம்முயற்சி தோல்வியடையவே ஏடிஎம் இயந்திரத்தையே மையத்திலிருந்து பெயர்த்து எடுத்துள்ளனர். ஏடிஎம் மையத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு சப்தம் எதுவும் கேட்காதவாறு அலேக்காக ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்றுள்ளனர். அந்த இயந்திரத்தில் ரூ.25.83 லட்சம் பணம் இருந்தது. அதோடு ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் களவாடிச் சென்று விட்டனர்.
மறுநாள் காலை ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாததை கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக திஜாரா காவல் நிலையத்தில் வங்கி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டு விட்டதால் எத்தனை பேர் திருட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் கூட காவல்துறையால் இன்னும் உறுதி செய்ய இயலவில்லை. ஏடிஎம் மையத்திற்கு அருகில் உள்ள வீடுகள், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் திருடர்களை கண்டறிந்து கைது செய்வோம் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM