ஏப்ரல் மாதம் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் திட்டம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து,
பாஜக
ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக கடந்த ஆண்டு
பசவராஜ் பொம்மை
பதவியேற்றார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில்
அமைச்சரவை மாற்றம்
அல்லது விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.

தற்போது, தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடமும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அது முடிந்த பிறகு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கவும் டெல்லி பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், டெல்லி செல்லும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அங்கு வைத்து அமைச்சரவையை மாற்றியமைப்பதா அல்லது விரிவாக்கம் செய்வதா என்று மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர், அடுத்த மாதம் யுகாதி பண்டிகைக்கு பின்னர் கர்நாடக அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடைபெறாலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு இந்த மாற்றங்கள் நடைபெறலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.