கோவை விமான நிலையத்தில், திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே தெலங்கானா ஆளுநர் தமிழிசையை வரவேற்க வந்திருந்த பாஜகவினர் பாரத் மாதாகி ஜே கோஷம் போட்டு இடையூறு செய்ய பதிலுக்கு விசிகவினர் ஜெய்பீம் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விசிக தலைவர் திருமாவளவன், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றார்.
அதே போல, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
விசிக தலைவர் திருமாவளவனை வரவேற்க விசிகவினர் விமான நிலைய வளாகத்தில் குவிந்திருந்தனர். அதே போல, தமிழிசையை வரவேற்க பாஜகவினரும் குவிந்திருந்தனர்.
திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன் இருவரும் கோவைக்கு ஒரே விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த திருமாவளவனை விசிக தொண்டர்கள் வரவேற்று எழுச்சித் தமிழர், என்று கோஷம் எழுப்பினர். பின்னர், திருமாவளவன் அங்கே வந்திருந்த ஊடகங்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, மறுபுறம் பக்கத்திலேயே தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்று பாஜகவினர் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று கோஷமிட்டனர். பாஜகவினர் கோஷம் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்ததற்கு இடையூறாக இருந்தது. இதனால், விசிகவினர் பதிலுக்கு ‘ஜெய்பீம்’ என்று கோஷமிட்டனர். இரண்டு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு ஒரு கோஷம் மோதலே நடந்தது.
இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் கோவை மாநகர காவல்துறையினரும் பாஜக மற்றும் விசிகவினரை கலைந்து போகச் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில், பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட அதற்கு பதிலடியாக விசிகவினர் ஜெய்பீம் என்று கோஷமிட்டதால் விமான நிலையத்தில் இரண்டு கோஷங்களும் விண்னைப் பிளந்தன. இதையடுத்து, திருமாவளவன் மற்றும் தமிழிசை இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“