நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
அனைத்து அணிகளும் அடுத்த சில நாட்களில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள நிலையில் போட்டித்தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான மும்பை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அணியின் முன்னணி பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியுள்ள ஆர்ச்சரிடம் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டாக இருக்கும் என கூறிய அவர், நினைத்ததை விட வேகமாக காயத்தில் இருந்து குணமாகி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது வேறு ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.