சென்னை: உக்ரைனில் போர் தீவிரமடைந்தபோது ஒரு வேளை சாப்பிடும் அளவு உணவை 3 வேளைக்கு உண்டு உயிர் பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய போரால் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் 1,921 பேர்சிக்கித் தவித்தனர். நீண்ட போராட்டங்களுக்கு பின்னர், அங்கு படித்து வந்த தமிழகமாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 9 மாணவர்கள் நேற்று முன்தினம் சென்னை விமானநிலையம் வந்தனர். அவர்களில் ஒருவரான சுங்குவார்சத்திரம் மாணவி ஏ.மோனிஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் உக்ரைனில் உள்ள சுமி நகரத்தில் மருத்துவம் படித்து வருகிறேன். கடந்த 24-ம் தேதி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அன்று முதல் பல்கலைக்கழகத்தில் பதுங்கு அறைகளில் அடைக்கப்பட்டோம். முதல் 3 நாட்களுக்குப் பிரச்சினை இல்லை. பின்னர், மின் இணைப்பு, குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பனிக்கட்டியை உருக்கி தண்ணீர் குடித்தோம். தொடர்ந்து உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் வெளியில் சென்றுபிரெட் வாங்கி வருவார்கள். ஒரு வேளை உணவை 3 வேளைக்கு வைத்திருந்து சாப்பிட்டோம். குண்டு வீசப்படும்போது பதுங்கு அறைகளுக்குள் சென்றுவிடுவோம். அச்சத்துடனே 12 நாட்களை பதுங்கு அறைகளில் கழித்தோம்.
மார்ச் 8-ம் தேதி பேருந்தில் போலந்து நோக்கிப் பயணித்தோம். கடும் சோதனை, விசாரணையால் சில மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை நாள் முழுவதும் பயணித்துக் கடந்தோம். போலந்து எல்லையில் நாங்கள் சென்ற ரயில் 10 மணி நேரம்ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து கீழே இறங்க அனுமதி இல்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பெண்கள் அவதிப்பட்டனர். ஒரு வழியாகதமிழகம் வந்தது நிம்மதியைத் தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரக்கோணத்தைச் சேர்ந்த பிரபாகரன் நாத் கூறும்போது, ‘‘நான் சுமி நகரத்தில் இருந்து மீட்கப்பட்டேன். பதுங்கு அறைகளில் அச்சத்துடன் நாட்களைக் கழித்தோம். உயிரோடு திரும்புவோமா என்ற பயம்கூட ஏற்பட்டது. கிடைக்கும் உணவை குறைவாக உட்கொண்டு, அடுத்த நாளுக்கு வைத்துக்கொண்டோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ரஷ்ய எல்லை 60 கி.மீ. தொலைவில் இருந்தாலும், உக்ரைன் ராணுவத்தினர் எங்களை ரஷ்யா செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து போலந்து நாட்டை அடைந்தோம். தமிழ் மண்ணை மிதித்த பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது’’ என்றார்.