வட்டி தவணைக்காக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கந்துவட்டி கும்பலுக்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரருக்கு கட்ட வேண்டிய தவணையை கட்டாததால் கந்துவட்டி சமூக விரோதக் கும்பல் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்முறை செய்ததுடன், வீடியோ படம் எடுத்து இணைய தளத்தில் பதிவேற்றினர்.
மனமுடைந்த அந்தப் பெண்ணின் தாயார் அந்தப் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிப்பாளையம் கிளைச் செயலாளர் வேலுச்சாமியிடம் நடந்ததை முறையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தோழர் வேலுச்சாமி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.
இதனால் சமூக விரோதிகள் தோழர் வேலுச்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதன் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் வேலுச்சாமி முறையிட்டார். ஆத்திரமடைந்த கந்துவட்டி சமூக விரோதக் கும்பல் தோழர் வேலுச்சாமியை 2010 மார்ச் 10-ம் தேதியன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல ஜனநாயக அமைப்புகளும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டன இயக்கங்களை மேற்கொண்டன.
இதனையடுத்து, இளம்பெண் பாலியல் வழக்கு, வேலுச்சாமி படுகொலை வழக்கு என தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஆமையன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக, வழக்கில் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், ரூ.35 லட்சம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வேலுச்சாமி படுகொலை வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா அவர்கள் குற்றவாளிகள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, மூன்றாண்டு கடுங்காவல், மேலும் ஓராண்டு கால தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த படுகொலை வழக்கு விசாரணையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.
இந்த இரண்டு வழக்குகளையும் அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் திருமலைராஜன் அவர்களை தமிழ்நாடு மாநிலக்குழு மனதார பாராட்டுகிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.