தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்களாரு அடிகளாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் திமுக ஆதரவாளர்கள் மத்தியிலேயே விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது. கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம் என்று கே.என்.நேருவுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
கடவுள் மறுப்பை வலியுறுத்திய பெரியாரின் திராவிடர் கழகத்தின் இயக்கத்தின் நீட்சியான திமுகவில், முக்கியத் தலைவர்கள் அமைச்சர்கள் பலரும் தற்போது கோயில்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். இந்த நிகழ்வுகள் எல்லாம் திராவிட இயக்க கடும்போக்குவாதிகளாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், திமுக தலைவர்கள் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு போலி நாத்திகம் பேசுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில்தான், திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் திமுகவினர் மத்தியிலேயே விமர்சனத்தைப் பெற்று சர்ச்சையாகி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், கே.என்.நேரு கீழே அமர்ந்திருக்கிறார். பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பகுத்தறிவை, சுயமரியாதையை வலியுறுத்தும் திராவிட இயக்கமான திமுகவுக்கு இழுக்காக அமைந்திருக்கிறது என்று இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் அறிவுறுத்தி விமர்சித்து வருகின்றனர்.
திமுக தருமபுரி எம்.பி டாக்டர் செந்திலுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.” என்று பதிவிட்டுள்ளார்.
செந்தில்குமாரின் இந்த பதிவை, நெட்டிசன்கள், கே.என்.நேரு பங்காரு அடிகளார் சந்திப்பு பின்னணியில் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
இதே போல, சில மாதங்களுக்கு முன்பு திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றபோது, தரையில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“