'காங்கிரஸ் இல்லாத இந்தியா' உருவாவதைத் தடுக்குமா காங்கிரஸ்? -தேர்தல் முடிவுகள் கற்றுத் தரும் பாடங்கள்

`நூற்றாண்டுப் பழம்பெருமை வாய்ந்த கட்சி, காந்தி, நேரு, நேதாஜி உள்ளிட்ட தலைவர்களெல்லாம் களம்கண்ட கட்சி, வெள்ளையனை விரட்டியடித்த கட்சி, நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி, சுதந்திர இந்தியாவை மிக நீண்டகாலம் ஆண்ட கட்சி என காங்கிரஸ் கட்சியைப்பற்றி புகழ்ந்துபேச நம்மிடையே கடந்தகாலங்கள் மட்டுமே கைவசம் இருக்கிறது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே கட்டியாண்ட கட்சி, தற்போது ஒற்றை இலக்கங்களில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, ஆட்சியிலிருந்த பஞ்சாப் மாநிலத்தையும் பறிகொடுத்து, தற்போது வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே தனது ஆட்சியை இழுத்துப்பிடித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ்

`காங்கிரஸ் இல்லா இந்தியா’ உருவாகிறதா?

`காங்கிரஸ் முக்த் பாரத்’ என்ற கோஷமே, கடந்த ஐந்தாண்டுகளாக மோடி, அமித் ஷா செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் முழங்கிவந்த ஒற்றைக் கோஷமாக இருந்தது. அதாவது, `காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்பதே அதன்பொருள். கிட்டதட்ட அத்தகையதொரு நிலையைத்தான் தற்போது வெளியாகியிருக்கும் ஐந்துமாநிலத் தேர்தல் முடிவுகளும் பிரதிபலித்திருக்கின்றன.

ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் என்ன?

குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெறமுடிந்தது. தேர்தலை கருத்தில்கொண்டு, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பே, உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. அதுமுதல் சூராவளியாகச் சுழன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, 209 பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தியதோடு, மக்கள் சந்தித்த ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் நேரடியாக களத்திற்கேச்சென்று குரல்கொடுத்தார். பத்தாததுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகொடுத்தார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரியங்கா காந்தி – ராகுல் காந்தி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 40% இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு ஒதுக்கினார். மேலும், தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் பேருக்கு அரசு வேலை, 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகை என கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கொடுத்து கவனம்சேர்த்தார். ஆனால், இத்தனை செய்தும் அவையெல்லாம் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காக மாறவில்லை. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ். மேலும், பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது.

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியே நேரடியாகப் பொறுப்பேற்று, தேர்தல்பணியாற்றிய உத்தரப்பிரதேசத்திலேயே இந்த நிலையென்றால் கோஷ்டிப் பூசல்களால், கட்சிக்குள்ளாகவே ஒருவரையொருவர் தோற்கடிக்கவேண்டும் என்று செயல்பட்ட பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தின் நிலையோ அதோகதிதான். உத்தரப்பிரதேசத்திலாவது காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் செல்வாக்கு இல்லை என்பதால் தோல்வியை ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி ஆதிகாரத்தில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் கோட்டைவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு பேரிடிதான். ஆனால், அதற்குக் காரணமும் காங்கிரஸ்தான்!

தலைமையாலும் கட்டுப்படுத்தமுடியாத கோஷ்டி பூசல்தான் பஞ்சாபில் தலைவிரித்தாடியது. இதனால், நான்காண்டுகளாக பஞ்சாப் காங்கிரஸ் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு, தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அதற்கடுத்ததாக, காங்கிரஸ் சார்பில் முதல்வர் பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான சித்துவுக்கும் இடையே மோதல் முட்டிக்கொள்ள பஞ்சாப் காங்கிரஸ் நிலையிழந்தது. விளைவு, தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்றது.

பஞ்சாப் காங்கிரஸ் – அம்ரீந்தர், சித்து

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட சரண்ஜித் சிங் சன்னி, மாநில தலைவர் சித்து இருவருமே படுதோல்வியடைந்தனர். கடந்த 2017 தேர்தலில் 77 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.

உத்தரகாண்ட் தேர்தல் களம்: ராகுல்காந்தி, ஹரீஷ் ராவத்

உத்தரகாண்டிலும் கிட்டதட்ட அதேநிலைதான். உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவுக்கும் இடையேயான பனிப்போர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கிஷோர் உபாத்யாயா, சரிதா ஆா்யா உள்ளிட்டோர் பா.ஜ.க-வுக்கு தாவல், பா.ஜ.க-வினர் அளவுக்கு தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாகக் கொண்டுசெல்லாத தொண்டர்களின் மனசோர்வு என கோஷ்டிப் பூசலாலும், சரியான திட்டமிடலின்மையாலும் காங்கிரஸ் கட்சி தன் தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுக்கொண்டது.

உத்தரகாண்ட் தேர்தல் முடிவுகள்

விளைவு, காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹரீஷ் ராவத்தே தோல்வியைச் சந்தித்தார். உத்தரகாண்ட் கருத்துகணிப்பில் பா.ஜ.க-வுக்கு இணையான இடங்களைப்பெறும் என்று சொல்லப்பட்ட காங்கிரஸ், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 19 இடங்களை மட்டுமே தன்வசப்படுத்தியது. பா.ஜ.க 47 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது.

அடுத்தடுத்தடுத்து, கோவா, மணிப்பூரிலும் பாதி இடங்களைக்கூட கைப்பற்றமுடியாமல், வெற்றிக்கனியை பா.ஜ.க-விடம் ஒப்படைத்துவிட்டு, பரிதாபமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது பழம்பெரும் காங்கிரஸ்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட இந்த ஐந்து மாநிலத் தேர்தலின் முடிவால் காங்கிரஸ் கூடாரம் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், காங்கிரஸ் இனியும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால், விழுந்த காங்கிரஸ் இனி எப்போதுமே எழுந்திராது; பா.ஜ.க சூளுரைப்பதுபோல் `காங்கிரஸ் இல்லாத இந்தியா’ மிக விரைவிலேயே எட்டப்படும் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாது காங்கிரஸ் மூத்த தலைவர்களே அச்சம் தெரிவித்துவருகின்றனர்.

பாஜக – காங்கிரஸ்

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணமாக, அதன்தோழமை கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், `காங்கிரஸ் கட்சியின் தலைமை பலவீனமான நிலையில் இருப்பதாலேயே இந்த தோல்வி ஏற்பட்டிருக்கிறது’ என விமர்சித்தார். தொடர்ந்து 2014 நாடாளுமன்றத்தேர்தலில் தோல்வி, அடுத்தடுத்து மாநிலத் தேர்தல்களில் தோவி என காங்கிரஸ் தோல்வி முகத்தையே சந்தித்தது.

சோனியா – சரத் பவார்

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல்காந்தி, கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தார். ஆனால், அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மேலும், காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வெற்றியைத் தவிறவிட்டார் (இரண்டாவது தொகுதியாக ராகுல்காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றார்).

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்ற ராகுல்காந்தி தான் வகித்துவந்த காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் தலைமையே இல்லாமல் காங்கிரஸ் தள்ளாடியது. பின்னர், ஏற்கெனவே அரசியலிலிருந்து விலகியிருந்த சோனியாகாந்தி, பெயரளவில் இடைக்கால காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதுபோன்ற காரணங்கள், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை மேலும் பலவீனப்படுத்தியது. மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளாகவும் தலைமைக்கு எதிராக அதிருப்தி தலைவர்கள் உருவாகவும் காரணமாக அமைந்தது.

ராகுல் காந்தி

குறிப்பாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, `கட்சியில் சரியான சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள், காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதினர். மேலும், அந்தக் கடிதத்தில் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களைச் சந்தித்து, மீண்டும் அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும், அப்போதுதான் கட்சியை பலப்படுத்த முடியும் என்ற கோரிக்கையையும் ஒருசேர வைத்திருந்தனர். ஆனால், அந்த 23 தலைவர்களின் கோரிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி செவிசாய்க்கவில்லை. அதோடு கட்சி செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து கடிதம் எழுதிய தலைவர்களையும் கண்டுகொள்ளாமல்விட்டது காங்கிரஸ் தலைமை.

காங்கிரஸ் அதிருப்தி தலைவர் கபில் சிபல்

மேலும், கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டிப்பூசல் விவகாரம் பெரிதாக வெடித்துக் கிளம்பியபோது, `காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர், யார் முடிவெடுக்கிறார் என்பதே தெரியவில்லை; உடனடியாக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியை (Congress Working Committee) கூட்ட வேண்டும். அப்போதுதான் எல்லாவற்றையும் கலந்தாலோசிக்க முடியும்’ என கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குரலெழுப்பினர். ஆனால், வழக்கம்போல கண்டுகொள்ளாத காங்கிரஸ் தலைமை மௌனத்தையே பதிலாகத் தந்தது.

இந்த நிலையில், ஐந்து மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, `மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்’ என ராகுல்காந்தி மற்றும் பிரியங்காந்தி தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, மீண்டும் `காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும்; கட்சியை மறுசீரமைக்க வேண்டும்’ என்ற குரல் வலுவாக எழுந்திருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி-யுமான சசி தரூர், “சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்ட நாம் அனைவரும் வேதனை அடைந்துள்ளோம். எதிர்கால இந்தியாவை பற்றிய திட்டங்கள் குறித்தும், நேர்மறையான செயல்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிபடுத்த வேண்டிய நேரம் இது. அந்த எண்ணங்களை மக்கள் மத்தியில் மீண்டும் எழுப்பி ஊக்குவிக்க வேண்டும். அதற்காக கட்சியின் தலைமையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று தெளிவாக தெரிகிறது; நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதுதான்” என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார்

அதேபோல, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், “ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. காந்திகளின் தலைமை இனி காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தராது. அவர்கள் இனிமேலும் கட்சியை ஒற்றுமையாக இணைக்கும் சக்தியாக இருக்க முடியாது” என வெளிப்படையாக விமர்சித்து கருத்து கூறியிருக்கிறார்.

ரன்தீப் சுர்ஜிவாலா

இந்தநிலையில், மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ எங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால், அதனை ஏற்று கொள்கிறோம். நாங்கள் மக்களின் ஆசியை பெற தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட சோனியாகாந்தி முடிவு செய்திருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று கூடிய காரிய கமிட்டி கூட்டத்தில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் , சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாக காரிய கமிட்டி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூட்டத்துக்குப் பின் வெளியான அறிக்கையில், “ஐந்து மாநிலங்களின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் வியூகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நான்கு மாநிலங்களில் பாஜக மாநில அரசுகளின் தவறான ஆட்சியை திறம்பட அம்பலப்படுத்தவும், தலைமை மாற்றத்தை ஏற்படுத்திய குறுகிய காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான விஷயங்களை சமாளிக்கவும் முடியவில்லை என்பதை கட்சி ஏற்றுக்கொள்கிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் தீர்ப்பை பணிவுடன் ஏற்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்காவும் இந்திய மக்களுக்காகவும் தொடர்ந்து விழிப்புடனும் துடிப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 2022, 2023 ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல்களிலும் 2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக இருக்கும்.

சோனியா காந்தியின் தலைமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் முன்னணியில் இருந்து வழிநடத்தவும், நிறுவன பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ள தேவையான மற்றும் விரிவான நிறுவன மாற்றங்களை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

`காங்கிரஸ் தலைமை என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் அமையப்போகிறது!’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.