காங்கிரஸ்: “எத்தகைய தியாகத்துக்கும் தயார்” -சோனியா காந்தி.. காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையோடிநடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சியானது ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் தோல்வியடைந்துள்ளது. அதிலும் முக்கியமான மாநிலமாக பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. மேலும் பஞ்சாப்பில் ஏற்கெனவே இருந்த ஆட்சியைக் கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை. இதில் பா.ஜ.க, பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அங்கு முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

காங்கிரஸ்

இதையடுத்து காங்கிரஸ் தலைமை முன்னதாக அறிவித்தபடி, காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசப்பட்டன. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் , சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாக காரிய கமிட்டி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோனியா, ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா எங்களை வழிநடத்தி, எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பார். அவரது தலைமையின் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

கூட்டத்துக்குப் பின் வெளியான அறிக்கையில், “ஐந்து மாநிலங்களின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் வியூகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நான்கு மாநிலங்களில் பாஜக மாநில அரசுகளின் தவறான ஆட்சியை திறம்பட அம்பலப்படுத்தவும், தலைமை மாற்றத்தை ஏற்படுத்திய குறுகிய காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான விஷயங்களை சமாளிக்கவும் முடியவில்லை என்பதை கட்சி ஏற்றுக்கொள்கிறது.

இன்று நாட்டில் நிலவும் அரசியல் எதேச்சதிகாரத்திற்கு எதிரான லட்சகணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கட்சி தனது மகத்தான பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

கட்சிக்காகவும் அதன் வேட்பாளர்களுக்காகவும் அயராது உழைத்த ஐந்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் தீர்ப்பை பணிவுடன் ஏற்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்காவும் இந்திய மக்களுக்காகவும் தொடர்ந்து விழிப்புடனும் துடிப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 2022, 2023 ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல்களிலும் 2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக இருக்கும்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

சோனியா காந்தியின் தலைமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் முன்னணியில் இருந்து வழிநடத்தவும், நிறுவன பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ள தேவையான மற்றும் விரிவான நிறுவன மாற்றங்களை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கும் முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.