புதுடெல்லி: “ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பில்லை. ஒவ்வொரு மாநிலத் தலைவரும், எம்பியும் பொறுப்பேற்க வேண்டும்” என மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அவர் கூறுகையில், “ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைவர்களும், எம்.பி.களும் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பு இல்லை. நாங்கள் மீண்டும் பாஜகவின் சிந்தாந்தத்தை எதிர்த்து போராடுவோம். எங்கள் சித்தாந்தத்தை முன்வைப்போம். அடுத்த தேர்தலில் முன்பை விட சிறப்பாக செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.
ஐந்து மாநிலத் தேர்தல் பின்னடைவு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. அதில், ’சோனியா காந்தி கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி கட்சியின் பலவீனங்களை சரி செய்திட வேண்டும். அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் தேவையான, விரிவான மாற்றங்களை செய்திட வேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கவலைக்குரிய ஒன்று தான். கட்சி சோனியா காந்தியின் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளது. தலைமையை மாற்றுவதற்கான பேச்சுக்கே இடமில்லைை” என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பல மாதங்களாக உட்கட்சி மோதல்களால், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 117 தொகுதிகளில் 18 மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டும், அங்கு காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.