கொல்கத்தா: மேற்கவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ், திரிணாமுல் கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுபம் தத்தா, புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தபன் காண்டு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடந்த நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பனிஹாட்டி நகராட்சியில் வெற்றி பெற்ற அனுபம் தத்தா, சிறுவர் பூங்காவிற்கு அருகே சென்ற போது, நேற்றிரவு அவரை வழிமறித்து மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். ரத்த வெள்ளத்தில் அனுபம் தத்தா சரிந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு பெல்கோரியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், ஜல்தா நகராட்சி கவுன்சிலரான காங்கிரஸ் தலைவர் தபன் காண்டு, அவரது மூன்று நண்பர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தபன் காண்டுவின் வயிற்றில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரை மீட்டு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒரே இரவில் இரு கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.