நம்பர் பிளேட்டுக்கு பதில் ‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட பைக்கில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கும் போட்டோ ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்துக்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர், “இந்தா… இதில ஆலங்குளம் எம்.எல்.ஏ-வின் தூரத்து சொந்தம்னு எழுதிக்கொடு” என கவுண்டமணி படத்தைப் போட்டு கலாய்த்திருந்தார். இந்த போட்டோ அம்ரிஸ் பி.ஜே.பி என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. யார் அந்த அம்ரிஸ் என விசாரணையில் இறங்கினோம்.
அதில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் எம்.ஆர்.காந்தி-யின் உதவியாளராக இருக்கும் கண்ணனின் மகன்தான் அம்ரிஸ் எனத் தெரியவந்தது.
பா.ஜ.க மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி ஆறு முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, இந்தமுறை சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார். காலில் செருப்புகூட போடாமல் கதர் வேட்டி, ஜிப்பா அணிந்து எளிமையாக வாழ்ந்து வருகிறார். எம்.ஆர்.காந்தி கட்சி பணிகள் செய்வதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். எம்.ஆர்.காந்திக்கு கார் டிரைவராக நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் கண்ணன். எம்.ஆர்.காந்தி எந்த பதவியிலும் இல்லாதபோதும் அவருக்கு உறுதுணையாக நின்றவர் கண்ணன். இதனால் கண்ணன் மீது எம்.ஆர்.காந்திக்கு தனி பாசம் உண்டு. கண்ணனுக்கும், கண்ணனின் மகன்களுக்கும் காந்தியிடம் மரியாதை கலந்த பாசம் உண்டு. அதனால்தான் தாத்தா என பைக்கில் எழுதியிருக்கிறார் என்று சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர்.
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஆனபிறகு டிரைவர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் கண்ணன். கண்ணனுக்கு இரண்டு மகன்கள் அதில் அம்ரிஸ் என்பவர் ‘அம்ரிஸ் பி.ஜே.பி’ என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போட்டோதான் வைரலாகியுள்ளது. நம்பர் பிளேட்டுக்கு பதிலாக ‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.எம்.ஆர்.காந்தி’ என எழுதிய பைக்கை சாலையில் ஓட்டுவது விதிகளுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்டு, அம்ரிஸின் தந்தையும், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ-வின் உதவியாளருமான கண்ணனிடம் பேசினோம். “அது யாராவது எடிட் செய்து போட்டிருக்கலாம். என்னவென்று பார்க்கிறேன்” என்றார்.