லிவிவ்,
உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.
அந்த வகையில் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில், தற்போது மேற்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அதே சமயம் தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு நகரங்களில் உக்ரைன் வீரர்கள் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டு வருவதால் அங்கு முன்னோக்கி செல்வது ரஷிய படைகளுக்கு சவாலாக உள்ளது.
இந்தநிலையில் 19-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், கீவ் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளை குறி வைத்து இரவு முழுக்க கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிழக்கு கீவ் நகரின் ப்ரோவெரி பகுதி கவுன்சிலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக மண்டல தலைமை நிர்வாகி ஒலெக்சி குலேபா உக்ரைன் நாட்டுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
ஒபோலோன்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய படைகள் பீரங்கியை கொண்டு தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தற்போது வரை தகவல் இல்லை. அடுக்குமாடி கட்டிடத்தில் தீ ப்பற்றி எரியும் காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.