சென்னை: குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தின் பிலோடா (எஸ்டி) தனித் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அணில் ஜோஷியாரா கரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
அவரது மறைவு காரணமாக குஜராத் சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஷைலேஷ் பர்மர் ஜோஷியாராவின் மரணம் குறித்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
70 வயதான அணில் ஜோஷியாரா, கடந்த ஜனவரி மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அகமதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டார்.
அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசியாரா பாஜக சார்பாக, 1995ம் ஆண்டு பிலோடா தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கர்சிங் வகேலா தலைமையிலான அரசாங்கத்தில், 1996 மற்றும் 1997-ம் ஆண்டுகளுக்கு இடையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
பின்பு சங்கர் சிங் வலேகா தனது ராஷ்ட்ரீய ஜனதா கட்சியை காங்கிரஸுடன் இணைத்தப் பின்பு, ஜோஷியாராவும் காங்கிரஸில் சேர்ந்தார். அன்றிலிருந்து அவர் பிலோடாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.