பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா வந்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 252, இலங்கை 109 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 303/9 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 28/1 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே (10), குசல் மெண்டிஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
அஷ்வின் அபாரம்
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. குசால் மெண்டிஸ் 52 ரன் எடுத்து அவுட்டானார். மாத்யூஸ் (1), டிசில்வா (4) டிக்வெல்லா (12), அசலங்கா (5) நிலைக்கவில்லை. கருணாரத்னே டெஸ்ட் அரங்கில் 14வது சதம் எட்டினார். இவர் 107 ரன் எடுத்து, பும்ரா பந்தில் போல்டானார். லசித்தை (2) அஷ்வின் வெளியேற்ற, லக்மலை (1), பும்ரா அவுட்டாக்கினார். கடைசியில் விஸ்வா (2), அஷ்வின் ‘சுழலில்’ சரண் அடைய, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அஷ்வின் 4, பும்ரா 3 விக்கெட் சாய்த்தனர்.
Advertisement