வாஷிங்டன்: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு சீனாவிடமிருந்து ரஷ்யா ராணுவ உதவியை நாடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது.
தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், சமீப நாட்களில் உக்ரைன் மீதான தனது தாக்குதலுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை சீனாவிடம் ரஷ்யா கேட்டுள்ளது எனத் தெரிவித்தாதாகவும், அவை என்ன மாதிரியான உதவிகள் என்பதை குறிப்பிட்டு அவர் தெரிவிக்கவில்லை எனவும் வாஷிங்டன்போஸ்ட் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், “உலக அளவிலான பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள அந்நாட்டிற்கு சீன அரசு உதவக் கூடாது. நேரடியாகவும் தனிப்பட்டமுறையிலும் சீனாவிற்கு இதைக் கூறிக்கொள்கிறோம். இந்த பாதிப்பிலிருந்து ரஷ்யா மீண்டு வர, சீனாவோ அல்லது வேறெந்த நாடுகளோ உதவினால் நாங்கள் அதை முன்னெடுக்க விடமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றசாட்டுகளை சீன அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் பங்கு குறித்து அமெரிக்கா தீங்கிழைக்கும் நோக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா – சீனா தூதர்களுக்கிடையே ரோம் நகரில் வைத்து பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், உக்ரைனிற்கு எதிரான ரஷ்யாவின் போரினால், பிராந்திய மற்றும் உலகலாளவிய பாதுகாப்பின் நேரடி விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க – சீன அதிகாரிகள் காணொளி மூலம் நடத்திய மாநாட்டில் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், இரு நாட்டின் உறவுகள் மற்றும் பொதுவான சர்வதேச, பிராந்திய பிரச்சினைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் இருப்பதாக சீன அரசும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து வரும் நாடுகளில் சீனாவும் ஒன்று. ரஷ்யாவுடனான தங்களின் நட்பு எல்லைகளற்றது எனத் தெரிவித்துள்ள சீனா, அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா சபையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.