சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தீபா, தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008 – 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax)கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008-ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாரயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், தீபா, தீபக்கை சேர்க்க அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.