சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008 2009-ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008 -ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் சத்தியநாரயண பிரசாத் அமர்வில் விசாரணையில் உள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைத்து விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதித்து விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.