தரமணியில் டி.எல்.எப். உலகளாவிய வளாகம்- ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டி.எல்.எப். டெளன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.

ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.

இந்த டி.எல்.எப். டெளன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்டஅரங்குகள், பிரத்யேக உணவு கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது.

இவ்வளாகக் கட்டிடம் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், சமூகக் கலந்துரையாடலை ஊக்கு விப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.

மேற்சொன்ன இத்தனித்துவமான வளாகத்தில் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தில், ஏறக்குறைய 7.7 லட்சம் சதுரஅடி பரப்பு அமைவிடத்திற்கு, டிட்கோ டி.எல்.எப். கூட்டுமுயற்சி நிறுவனம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

செயல்படுத்தப்பட்டு வரும் இந்த டெளன்டவுன் திட்டமானது, சுமார் 70ஆயிரத்துக்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும்.

இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் எஸ்.ஜி. டி.பி. (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஜே.எம்.எச். ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், டிட்கோ செயல் இயக்குநர் வந்தனா கர்க், டி.எல்.எப். ரெண்டல் பிசினஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கத்தார், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சதீஷ் கோபி, டி.எல்.எப். உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்… 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை மந்திரி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.