தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்

சென்னை:

லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்துக் கொண்டார்.

ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

முதல்-அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு 3 நபர்களைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் மற்றும் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும், நீதிதுறை அல்லாத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், மூத்த வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோரை நியமித்து கவர்னர் உத்தரவிட்டார்.

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பொறுப்புடைமையும், சார்பற்ற நிலையினையும் நிலைநாட்டும் பொருட்டு, பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (முன்னாள் உறுப்பினர்கள் உட்பட), அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அமைப்பு, வாரியம், சங்கம், நிறுவனம் தன்னாட்சி அமைப்பு போன்றவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

குற்ற நிகழ்வு நடைபெற்ற நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இதில் பெறப்படும் புகார் மனுவின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்டப் பொது ஊழியரின் நிலையினையும் பொறுத்து, அப்புகாரை விசாரிக்க, தனது விசாரணை பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ அல்லது விழிப்புப்பணி ஆணையத்தையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் உண்டு.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.