புதுச்சேரி: காலாப்பட்டிலுள்ள மத்திய சிறை வளாகத்தில் இயற்கை விவசாயப் பணிகளை கைதிகள் மேற்கொள்வதற்கான தொடக்க நிகழ்வு இன்று (மார்ச் 14) மாலை நடந்தது. இதனால் தினமும் ரூ.200 கூலி கிடைப்பதுடன், மனநிறைவுடன் உறக்கம் வருவதாக உருக்கமாக தண்டனை கைதிகள் குறிப்பிட்டனர்.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என மொத்தம் 244 பேர் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறைத் துறைத் தலைவர் ரவிதீப் சிங் சாகர் வழிகாட்டுதலில், சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தன்னார்வ நிறுவனங்கள் மூலம் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பது, யோகா, நடனப் பயிற்சி மூலம் அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவது போன்ற திட்டங்கள் சிறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது புதிய முயற்சியாக சிறையில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து ஆடு, மாடு, கோழி, முயல்கள் வளர்த்தல் போன்ற செயல்களில் கைதிகள் ஈடுபட்டு வருகின்றறனர்.
மத்திய சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில், தற்போது இயற்கை விவசாயத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். அங்குள்ள தண்டனைக் கைதிகள் மூலம் நிலத்தை உழுது, பாத்தி கட்டி, வாழை, மஞ்சள், அண்ணாசி உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இயற்கை முறையிலான விவசாயம் என்பதால், அதற்குத் தேவையான உரங்களுக்காக ஆடு, மாடுகள், முயல் வளர்ப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சிறை வளாகத்தில் உள்ள பழைய வீணான பொருள்களைக் கொண்டு ஆடு, மாடுகளுக்கான கொட்டகையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவசாயப் பணிகளில் முதல்கட்டமாக 75 தண்டனைக் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தினசரி வேலைக்காக ரூ.200 வரை கூலியாக வழங்கப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டப் பயிர்களில் இருந்து விளையும் பொருள்களை புதுச்சேரி சந்தையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தவும், தண்டனைக் காலம் முடிந்து அவர்கள் வெளியே சென்ற பிறகு சுயதொழில் செய்து வருவாய் ஈட்டவும் ஏதுவாக இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதிகளின் ஒருங்கிணைந்த விவசாய பணிகள் தொடக்க நிகழ்வு இன்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர் முன்னிலை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் அசோகன், துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கைதிகளால் உருவான ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை துவக்கி வைத்து பாராட்டி பேசினர்.
இதுகுறித்து தண்டனை கைதிகள் கூறுகையில், “தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை கிடைக்காமல் சிறையில் உள்ளோம். 15 நாட்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். விவசாயம் செய்து விட்டு நிம்மதியான உறக்கம் வருகிறது. தண்டனை காலம் முடிந்தால் சிறையில் இருப்போரை தமிழகம், மற்றும் வடமாநிலங்களில் விடுதலை செய்கிறார்கள். அதுபோல் எங்களையும் விடுதலை செய்யவேண்டும். எஞ்சிய காலத்தில் விவசாயம் செய்து வாழ விரும்புகிறோம், விவசாயத்தால் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் ரூ. 200 வரை கிடைக்கும் கூலிக்கு மதிப்பு அதிகம்” என்று குறிப்பிட்டனர்.