போபால்,
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.
நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.
இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக மாநிலத்தில் கேளிக்கை வரியில் இருந்து இந்த படத்துக்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தனது டுவிட்டரில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், 90களில் காஷ்மீரி இந்துக்கள் எதிர்கொண்ட வலி, துன்பம், போராட்டம் மற்றும் மனவேதனையின் இதயத்தைத் தாக்கும் கதையாகும். இதை அதிகபட்ச மக்கள் பார்க்க வேண்டும், எனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதை வரிவிலக்கு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.