பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முதல்வராக இருந்த சன்னியை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் லப் சிங் உகோகே (35) தோற்கடித்து சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மட்டுமல்லாது இந்தியா முழுக்க லப் சிங் வெற்றிதான் பிரபலமாகப் பேசப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், அவர் அம்மா செய்யும் வேலை. லப் சிங் தாயார் பல்தேவ் கவுர் பஞ்சாபின் பர்லானா மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக இருக்கிறார்.
தன் மகனின் வெற்றி குறித்து பல்தேவ் கவுர் கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக பள்ளியில் தூய்மைப் பணியாளராக இருக்கிறேன். நான் பணியாற்றும் பள்ளியில்தான் எனது பிள்ளைகள் படித்தனர். எனது வாழ்நாள் முழுக்க எங்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் துடைப்பத்தை சின்னமாகக் கொண்ட அரசியல் கட்சியில் என் மகன் சேர்ந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்போது என் மகன், தினமும் நான் பயன்படுத்தும் அதே துடைப்பம் சின்னத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறான்.
இப்போது, நான் வேலை செய்யும் பள்ளிக்கு, டெல்லியில் இருக்கும் பள்ளி போன்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுக்கும்படி என் மகனிடம் கூறும்படி என்னிடம் கேட்கின்றனர். பக்கத்தில் வசிப்பவர்களும் ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். அனைத்தும் மாற்றப்படவேண்டியிருக்கிறது. என் மகன் அதற்காக கடுமையாக உழைக்கிறான்.
எங்களுக்கு சிறிய நிலம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்கிறோம். என் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். எங்கள் மகன் வெற்றி பெற்றுவிட்டதால் எங்களது வாழ்க்கை தரம் மாறிவிடப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்து எங்களது வேலையைச் செய்வோம். இன்னும் என்னை `ஜாடுவாலி’ (தூய்மைத் தொழிலாளி) என்றுதான் அழைக்கின்றனர். அதுதான் எனது அடையாளம்” என்றார்.
இது குறித்து லப் சிங் தந்தை தர்ஷன் கூறுகையில், `ஒட்டுமொத்த கிராமமும் என் மகனின் வெற்றிக்கு உதவியது. முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்” என்றார்.
லப் சிங் ஆரம்பத்தில் ராணுவம் அல்லது போலீஸில் சேர முயன்று, ஆனால் அது கைகூடவில்லை. எனவே மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையைத் திறந்தார். 2013-ம் ஆண்டு அந்த கடையை மூடிவிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலராக தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்கான நேரம் போக எஞ்சிய நேரத்தில் தன் பெற்றோரின் விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார். லப் சிங் மனைவி வீர்பால், டெய்லர். வீட்டில் இருந்து துணி தைத்துக் கொடுத்து தன்னால் முடிந்த அளவு குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறார்.
தற்போது லப் சிங்கின் வெற்றியால் அவர் குடும்பம் மட்டுமின்றி அந்த கிராமமே உற்சாகத்தில் உள்ளது.